Main Menu

மருத்துவம்

நிந்தவூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இரட்டைக்குழந்தைகளின் தாய் பற்றிய அலசல்

- ஏரூர் நவாஸ் தாவூத் அனுப்புனர் - ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் "பலமுறை தற்கொலைக்கு முயன்றும் சாக முடியவில்லை. கொலை செய்தாலாவது தூக்குத்தண்டனை கிடைக்குமென்று தான் அவ்வாறு செய்தேன்" என்கிறாராம் கொலைகளுக்கு காரணமான குழந்தைகளின் தாய்.

இது தான் அந்தப்பெண்ணின் வாக்குமூலம்.வாழ்க்கை மீது எத்தனை வெறுப்புடன் வாழ்ந்திருக்கிறாள்? அவளைப்பற்றி அவசரமாக மதிப்பீடு செய்வதை விடுத்து, அவளை அவளது நிலையிலிருந்து உணர்ந்தால் சில புரிதல்களுக்கு வர முடியும் .

ஏற்கனவே 2015 ல் பிறந்த குழந்தையை 2017 பறி கொடுத்திருந்தாளாம். தற்கொலைக்கும் முயன்றிருக்கிறாள். பின்னர் மீண்டும் கர்ப்பமடைகிறாள். 2018ல் அடுத்து இரட்டைக்குழந்தைகளை ஈன்றெடுத்தாள். இடையில் பலமுறை தற்கொலைக்கான முயற்சியிலும் ஈடுபடுபட்டு அவைகளில் தோல்வியுமடைகின்றாள். எனவே, அவள் குழந்தைப்பேற்றின் பின்னரான மன அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை. பீடிக்கப்பட்டிருந்த மன அழுத்தம் இப்போது தீவிரமடைந்திருக்கிறது என்ற கருத்துக்கே வர முடியும்.

மனநிலை பாதிக்கப்பட்டதாக மருந்து பாவித்திருக்கிறாள். தொடர்ந்து பாவித்தாளா? முறையான சிகிச்சை பெற்றாளா? அது பற்றி எதுவும் தெரியவில்லை..மருந்துகள் மட்டும் எடுத்தாளா? உளவள ஆலோசனையும் பெற்றிருப்பாளா?, ஆயின் தொடர் சிகிச்சை பெற்றிருக்க வாய்ப்பில்லையென்றே செய்தித்தளங்களில் காணக்கிடைத்தது. அது உண்மையாகவும் இருக்கலாம்.

ஒரு குழந்தையை விபத்தொன்றில் பறி கொடுத்த சில மாதங்களில் இன்னொரு முறை கருவுறுதல் உடலியல் ரீதியாக தயாரென்றாலும், உள ரீதியாக தயாராக இருந்திருப்பாளா? என்பது பற்றிச்சிந்தித்திருக்கலாம். ஏனென்றால், இடையிலொரு தற்கொலை முயற்சி நடந்திருக்கிறதே. மனநோய்க்கென சிகிச்சை பெற்றிருந்த சான்றுகள் இருந்தாலும், தொடர்ந்து மருந்து உட்கொண்டிருப்பாளா?

ஏனென்றால், கர்ப்பமான பெண் கண்ட மருந்து வகைகளைக் குடித்தால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பேற்படலாம். கருவிற்கு ஏதேனும் நடக்கலாம். மருந்து குடித்துக்கொண்டு பாலூட்டுவது நல்லதல்ல என்று அறிவுரை சொல்லுமளவிற்கு VOG, Psychiatrists ஐ விட அறிவாளிகள் தான் நம் அண்டை வீடுகளில் இருப்பவர்கள்.

குழம்பிய மனமென்பது உதிர்ந்து விழுந்த பட்டாம்பூச்சியின் சிறகு போன்றது. சிறிய மூச்சுக்காற்றுக்கும் நொந்து ஒடிந்து விடும். ஏற்கனவே ஒரு பிள்ளையை இழந்து காயமுற்றவளை அயரவர்கள் எவ்வாறு அணுகியிருப்பார்கள் என்பது இங்கு பெரும் கேள்விக்குறி. அதுவும் அருகில் தூங்கிய குழந்தை இவள் கண்ணயர்ந்த ஓரிரு நொடிகளில் நீரில் விழுந்திருக்கிறதென்றால், இவளது கவனயீனம் குறித்து எப்படியெல்லாம் மனசாட்சியில்லாமல் பேசியிருப்பார்கள்?

என்ன தான் படித்தவரென்றாலும், மன அழுத்தம், மனச்சிதைவிற்குட்பட்டவர்களை கையாளும் பக்குவம் எம்மவர்களுக்கு போதவே போதாதெனலாம். ஏனெனில், காய்ச்சல், தலைவலி, புற்றுநோய் போல மனநோயும் ஒரு நோயென்று நாம் கருதுவதேயில்லை. லூசு என்றும், விசரி என்றும் தாராளமாய் ஏளனப்படுத்தி விடுகிறோம். கூழாங்கல்லென்று எறியும் சொல் எத்தனை ஆழத்தில் அதிர்வை ஏற்படுத்துமென எவருக்கும் புரிவதில்லை..

உள நோய்கள் குறித்த போதிய விழிப்புணர்வு அவளது உறவினர்களுக்கு இருந்திருந்தால், அந்தப்பெண் தனிமையில் விடப்பட்டிருக்கமாட்டாள்.யாருக்கும் தெரியாமல் அக்குழந்தைகளைக் கொல்லுமளவுக்கு அவளுக்கு வாய்ப்பும் இருந்திருக்காது. உளவள ஆலோசனைகள் நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சூழவுள்ளவர்களுக்கும் நோயாளிகளைக் கையாள்வது குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்படுதல் வேண்டும். மனநோயென்பது ஒரு போதும் திடீரென உக்கிரமடைவதில்லை.

அது மனச்சோர்வுற்று, அதனால் மனநிலை பாதிப்படைந்து, மூளைக்குச்செல்லும் இரத்தத்தின் அளவு சமநிலையற்றதாகி, அதனால் மனநிலை விரக்தியுற்று தனது மனம் எதைச்செய்ய எத்தணித்தாலும், அதைத்தடுக்கும் மூளையின் செயற்பாடு செயலற்றுப் போய் விடுவதனால், மனநோய்க்குள்ளாகி விடுகின்றனர். அவளது கடைசி நிலையும் அப்படியானதே.சம்பவ தினத்திற்கு முன்னைய நாட்களில் அவளுள் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்து யாராவது கவனமெடுத்திருந்தால், இன்னும் அவதானமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் அந்தப்பெண்ணின் பிறந்த ஊர் நிந்தவூரில்லை. அவள் வெளியூர்ப்பெண்.

பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு, உணவுப்பாரம்பரியங்கள் என மாறுபட்ட ஒரு ஊரின் சூழலிலுக்கேற்ப எத்தனை தூரம் பழக்கப்பட்டிருப்பாள். அயலவர்களுடன் அல்லது அவளுடன் அயலவர்கள் எந்த மாதிரியான சினேகிதம் இருந்திருந்தாலும் அவளுடன் அயலவர்கள் சற்று அதிகமாக கரிசணை காட்டி இருந்திருக்கலாம்.

தென்னையை நுவரெலியாவில் நடுவதாலோ, தேயிலையை யாழ்ப்பாணத்தில் நடுவதாலோ கிடைக்கும் விளைச்சல்கள் குறித்து யாரும் சொல்லித்தெரிய வேண்டுமென்பதில்லை. ஏன்? எத்தனையோ பேர் வாழும் போது, இவளுக்கு மட்டுமென்ன? என கேள்வியெழும்பலாம்.

சாதாரண பெண்ணால் முடியும். ஆனால் மன நோயினால் பாதிக்கப்பட்டவளுக்கு "உப்பு போதாது" என்று சொல்லும் ஒரு சிறு குறையும் பெரிதாகவே அவளைக் காயப்படுத்தும். பிறந்ததோ இரட்டைக்குழந்தை.ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே சிரமப்படும் போது, இரட்டைக்குழந்தை என்பது அவளைச் சிரமப்படுத்தியிருக்கலாம். பிள்ளை வளர்ப்பென்பது இலகுவானதொரு பணியில்லை அல்லவா?

பிள்ளை வளர்ப்பதென்ன கஷ்டமா? சமைப்பதும் ஆடைகளைத் துவைப்பதும் பெரிய வேலையா? எனக்கேட்கும் பெண்களே எம்மிடையே அதிகம். ஆனால், மன அழுத்தத்திற்குட்பட்ட ஒரு பெண் படும் சிரமங்கள் அவர்களாக வாழ்ந்து உணர்ந்தால் தான் புரியும்.

இவ்வாறான மனநோய்க்கு ஆளானவர்களை அவர்களது வெளிநிலை செயற்பாடுகளை மட்டும் வைத்து கவனித்து விட்டு அவளொரு சோம்பேறி என்றோ அல்லது எந்தவொரு வேலையையும் சரி வரச்செய்யமாட்டாள் என்றோ ஒரே வார்த்தையில் கூறி விடுவோம்.

வீட்டுப்பணிகள், கணவனின் பணிகள், குழந்தைகளின் பணிகள், விருந்தாளிகள் என தன் இயலாமையுடன் அவள் போராடியிருக்கலாம். அவளுடைய சிரமங்கள் குறித்து சில போது கணவரும் கரிசனையின்றி இருந்திருக்கலாம் (அவரும் மனிதன் தானே) அது அவளை இன்னும் சுட்டெரித்திருக்கலாம்.

பணிப்பெண்ணொருவர் இருந்திருந்தாலும், அவளுடன் இவள் முரண்பட்டிருக்கலாம். ஏனெனில், எதிலும் திருப்தியடையாமை, எல்லோருடனும் முரண்படுவது இத்தகைவர்களின் பண்புகளில் ஒன்றாகும் .அதுவே அவளை சிரமமும் படுத்தியிருக்கலாம்.

குழந்தைகளுடன் தூக்கமின்றிய இரவுகளால் போதிய உறக்கமின்றி மூளையிலுள்ள அழுத்த சுரப்பிகளின் அளவுகள் அதிகரித்திருக்கலாம். வெளிப்பயணங்கள் மேற்கொள்ளாமையால் அலுப்பேற்பட்டிருக்கலாம். இப்படி நிறையக்காரணங்கள் அவளுக்கு வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. நல்ல கணவன், வசதியான வாழ்க்கையென்று எமக்குத்தோன்றும் வாழ்வின் பின்புறம் சோகமாகவும் இருந்திருக்கலாம்.

எமக்கு இலகுவான காரியமாகத்தெரிவது இன்னொருவருக்கு சிரமமாக தெரியலாம். அதுவும் மனநோய்க்குட்பட்டவரது மனம் கடலில் வெளித்தெரியும் பனிக்கட்டியைப் போன்றது.அதன் கீழுள்ள பனிமலையின் விஸ்தீரணம் யாருக்கும் விளங்குவதில்லை. அவர்கள் குறித்து நிறைய விழிப்புணர்வுகள் அவசியம் தேவை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் அன்பும் அரவணைப்புமே தன் மனதிலுள்ள பிரச்சினைகளுக்கு அவர்களுக்குத் தீர்வை அவர்கள் கேட்பதில்லை. உணர்வுகளை இறக்கி வைக்க ஒரு தோள் வேண்டும். அதற்கு எவரேனும் கரிசணை காட்டத்தான் வேண்டும்.

இவ்வாறான சோகமான செய்திகளைக் கேள்விப்படும் போது, கடந்து செல்வதை விட எம்மைச்சூழவுள்ளவர்களில் தோன்றும் மாற்றங்கள் பற்றி கொஞ்சம் கரிசனையெடுப்பது தான் மனிதராய் நம் கடமை.

மனநல வைத்தியர் ஆயிஷா அபூபக்கரின் முகநூலிலிருந்த இக்கட்டுரையில், ஒரு சில மேலதிக வரிகளும் குறைக்கப்பட்ட வரிகளுமாக.