Main Menu

வைத்தியக் கட்டுரைகள்

கொடூர கொரோனாவின் ஆபத்தும் : விழிப்புணர்வின் அவசியமும்

ஓட்டமாவடி செய்தியாளர் அ.ச.மு சதீக் இன்று உலகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண்ணுக்குப் புலப்படாத கொரோனா கோவிட் 19 வைரஸ் என்பதை சகலரும் அறிந்து கொண்டிருக்கின்றோம். உலக நாடுகளில் வல்லரசு நாடுகள் என்றழைக்கப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளே கதி கலங்கி நிற்கும் நிலையிலுள்ளது.

ஆனால், இலங்கையில் ஊரடங்குச்சட்டத்தை அமுலில் வைத்து எமது நாடு மக்களைத் தனிமையில் வீடுகளிலிருந்து இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு செயற்பாடுகளைச்செய்து வருகின்றது. ஆனால், பொது மக்கள் இந்த விடயங்களில் அசிரத்தையோடு காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா கோவிட 19 வைரஸைத் தடுப்பதற்கு இன்று நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களாகக் கைகழுவுதல், சமூக உறவாடல்களில் ஒருவருக்கொருவர் இடைவெளியைப்பேணல், முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தல், முதியோர்களுக்கான தேவைகளை இளையவர்கள் நிறைவேற்றல், தனிமையாக வீட்டிலிருத்தல் போன்றவற்றை நாம் குறிப்பிடலாம்.

இவ்வாறான நிலைமைகள் இருந்தும,  இன்று மக்கள் அதனைப்பராமுகமாக இருப்பதற்குக் காரணம் என்னவென்ற கேள்வி எமக்குள் எழுகின்றது. இந்ந கொரோனா வைரஸ் பொது மக்களுக்கு தொற்றும் நோயாகக் காணப்பட்டாலும், இதனைக் கட்டுப்படுத்துவது இந்நாட்டின் பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத்துறையைச் சேர்ந்த வைத்தியர்களின் பங்களிப்பு, பிரதேச செயலாளர்களின் பணி என்றவொரு நிலைமையை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.

அது மாத்திரமல்லாது, எங்களுடைய பிரச்சினைகள் சகலவற்றையும் அரசாங்கம் தீர்த்துத்தர வேண்டுமென்ற மனநிலையில் நாங்கள் பழக்கப்பட்டு விட்டோம். இந்த கொரோனா கோவிட் 19 பிரச்சினை கொழும்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களில் தான் அதிகளவாகவுள்ளது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லையென்ற மனோநிலை சகலரிடமும் காணப்படுகின்றது. அத்துடன், முகக்கவசம் அணிந்தால் போதுமானது அல்லது கை கழுவினால் கொரோனா வராது அல்லது சமூக இடைவெளியைப் பேணுவதால் எமக்கு கொரோனா வராதென்ற மனோநிலை எம்மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அதாவது, கொரோனா தொற்றிலிருந்து விடுபட பல்வேறு செயற்பாடுகளை ஒன்றாகக் கடைப்பிடிக்க அரசாங்கம் கூறியும், மக்கள் ஒன்றை விட்டு ஒன்றை மாத்திரம் கைக்கொள்ளும் நிலைமை காணப்படுகினறது.

அரச திணைக்களங்களும் மற்றும் ஏனைய அமைப்புகளும் பல்வேறு செயற்றிட்டங்களினூடாக கொரோனா கட்டுப்படுத்தலில் ஈடுபட செயற்பட்டும் மக்கள் அசிரத்தையாகக் காணப்படுகின்ற ஒரு அபாயகரமான நிலைமை காணப்படுகின்றது.

இந்த வைரஸ் சாதாரண தடிமன், காய்ச்சல் போன்றதென கிராம மக்கள் புராதான கால கொத்த மல்லி, சுக்கு, மர மஞ்சளை அவித்து குடித்தால் போதுமென்றும், இது அரசியலாக்கச்செய்யப்படும் சதித்திட்டமென்றும் இன்னும் ஒரு சிலர் இது சீனாவின் சதியென்றும் ஒரு சிலர் பக்கத்து பக்கத்து வீடுகளில் ஒன்றுகூடி இந்நோயுடைய பாரதூரம் விளங்காமல் பேசித்திரிகிறார்கள்.

இது எங்களுடைய சவால் என்ற ஒரு வகையில், அதன் தொனிப்பொருளில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். இதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். கிராமப்புறங்களில் காணப்படும் இளைஞர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காமல், ஊரடங்குச்சட்டம் அமுலிலிருக்கும் போது நடமாடித்திரிவது மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் காணப்படுகின்றது.

இதன் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் அடிதடிகளின் போது பாதிக்கப்படும் இளைஞர்கள் பொலிஸாருக்கு ஊறு விளைவிக்கின்றனர். எனவே, குறிப்பாக இளைஞர்களுக்கு மாவட்ட இளைஞர் சம்மேளனத்தினூடாக நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு வழங்கப்பட வேண்டும் மற்றும் இவ்வாறான இளைஞர்களை நாட்டின் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது, பொலிஸாருக்கு ஒத்துழைத்து மக்களுக்கு உதவிகள் செய்யும் தொண்டு படையணியாக மாற்றம் வேண்டும்.

தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்து பொது மக்களுக்கான விழிப்புணர்வுகளை வீடு வீடாகச்சென்று மேற்கொள்ள வேண்டும். அத்துடன், மட்டகளப்பு மாவட்டத்தில் வேலை செய்கின்ற தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரச திணைக்களங்கள், இளைஞர் அமைப்புகள், மதப்பெரியார்கள், பொலிஸார், இராணுவத்தினர், அப்பிரதேச வைத்தியர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரின் பங்குபற்றுதலைப் பெறக்கூடிய வழி வகையில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஒரு பலதரப்பு அரங்கத்தை இணையத்தினூடாக ஏற்படுத்தலாம்.

இப்பல்தரப்பு அரங்கத்தின் கூட்டங்களை இணையத்தளத்தினூடாக நடாத்தலாம். கருத்துகளைப்பதிவு செய்யலாம்.. இப்பல்தரப்பு அரங்கத்தினூடாகப் பெறப்படும் ஆலோசனைகளை ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதினூடாகவும், மக்களின் பங்குபற்றுதல் இணைய வழி முறையினூடாகவும் அதிகரிக்கின்ற போது, பொது மக்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளுகின்ற போதுமே இந்த கெரோனாவின் கோரப்பிடியிலிருந்து நாங்கள் விடுபடலாம்.

ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் நிலபுல, மத, கலாசாரச் செயற்பாடுகள் வெவ்வேறாகக் காணப்படுவதனால், இந்த கொரானா கோவிட் 19 இலிருந்து பாதுகாப்புப்பெற ஒவ்வொரு பிரதேச செயலகத்தின் செயற்றிட்டங்களும் பொது மக்களுக்கு சென்றடையக்கூடிய வழி வகைகள் செய்யப்பட வேண்டும்.

இந்த கொரோனா கோவிட் 19 தொற்றின் போது, பொது மக்களை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுதல் முக்கியத்துவத்தினை விழிப்படையச் செய்ய வேண்டியதும், சுகாதார மேம்படுத்தலின் கூட்டான செயற்பாடுகளை விழிப்படையச் செய்ய வேண்டியதும் காலத்தின் கட்டாயத்தேவையாகவுள்ளது.