Main Menu

சர்வதேசம்

இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முன்பே ஆப்கானை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியும், தாலிபான்களின் நேர்மையும்.

முப்பத்திரெண்டாவது தொடர்...

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

அமெரிக்கா போன்ற நாடுகள் பெருமளவு இலாபத்தை எதிர்பார்த்துத்தான் முதலீடுகளைச் செய்வார்கள். முதலீடு எனும் போது, ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தல், ஆக்கிரமிப்புச்செய்தல், போருக்கான உதவிகளை வழங்குதல் போன்றன அமெரிக்காவைப் பொறுத்த வரையில் பாரிய முதலீடுகளாகும்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்த ரஷ்யப்படைகளை விரட்டுவதற்காக அங்குள்ள முஜாஹிதீன்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில், பில்லியன் கணக்கான டொலர்களை அமெரிக்கா செலவு செய்தது.

ரஷ்ய படைகளை ஆப்கானை விட்டு விரட்டுவது மட்டும் அமெரிக்காவின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, தங்களால் உருவாக்கப்பட்ட அல்-கொய்தா, தாலிபான் உட்பட முஜாஹிதீன்களை தங்களது கூலிப்படைகளாக பாவிப்பதுடன், ஆப்கானிஸ்தானையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டுமென்பது அமெரிக்காவின் திட்டமாகும்.

இதில் “வடக்கு முன்னணி” எனும் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்ந்து அமெரிக்காவின் கூலிப்படைகளாக செயற்பட்டனர். தாலிபான்களையும், அல்-கொய்தாவையும் வேட்டையாடுவதில் குறியாக இருந்தனர். ஆனால், அல்-கொய்தா, தலிபான் போன்ற முஜாஹிதீன்கள் தங்களது வளர்ச்சிக்காக அமெரிக்காவை பயன்படுத்தினார்களே தவிர, இவர்களை அமெரிக்காவின் தேவைக்காகப் பயன்படுத்த முடியவில்லை.

இவ்வியக்கங்களுக்கு பல பில்லியன்களைச்செலவு செய்திருந்தும் அதனால் இலாபமாக தனது நோக்கத்தை அடைய முடியாத காரணத்தினால் இவ்வியக்கங்களை பழிவாங்குவதற்கு அமெரிக்கா சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தது.

1990இல் குவைத்தை சதாம் ஹுசைன் ஆக்கிரமித்த போது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் வருகையை எதிர்த்தனால் அமெரிக்காவுடன் அல்-கொய்தா இயக்கம் நேரடியாக முரண்பட்டுக்கொண்டது.

இதனால் அல்-கொய்தா இயக்கத்தின் வலையமைப்புக்களைத்தேடி அழித்தாலும், தன்னால் வளர்க்கப்பட்ட மற்றுமொரு இயக்கமான தலிபான்களை அழிப்பதற்கு அமெரிக்காவுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்காவின் நியோர்க் நகரில் அமைந்திருந்த இரட்டைக்கோபுர வர்த்தகக் கட்டடங்கள் மீது 2001 செப்டம்பர் 11 இல் கடத்தப்பட்ட விமானங்களை மோதச்செய்து தாக்குதல் நடாத்தப்பட்டது.

இத்தாக்குதலினால் சர்வதேச அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கியது. உலகின் பல பாகங்களிலும் சுதந்திரத்துக்காகப் போராடிய விடுதலை இயக்கங்களைஒப்பி பயங்கரவாதிகள் என அமெரிக்கா பட்டியலிட்டதன் காரணமாக போராட்ட இயக்கங்கள் அச்சமடைந்தன. இதனால் தங்களது போராட்ட தந்திரோபாயங்களை மாற்றிக்கொண்டனர். அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் குறிப்பட முடியும்.

இந்தத்தாக்குதலை காரணம் காட்டி உலகிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு வளைந்து கொடுக்காத ஆட்சியாளர்கள் என தனது அத்தனை எதிரிகளையும் அழிப்பதற்கு அமெரிக்காவுக்கு சந்தர்ப்பமாக அமைந்தது.

தங்களால் வளர்க்கப்பட்ட அல்-கொய்தா, தலிபான் ஆகிய இயக்கங்கள் ஒன்றாக ஆப்கானிஸ்தானில் இருப்பதனாலும், ஏற்கனவே ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கான சந்தர்ப்பத்தினை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவானது தனது இரட்டை கோபுரம் மீதான தாக்குதலை அல்-கொய்தா இயக்கம் தான் மேற்கொண்டதென்று உடனடியாக அறிவித்தது.

அதனால் தாக்குதல் நடாத்துவதற்கு கட்டளை வழங்கிய அவ்வியக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி தாலிபான் அரசை அமெரிக்கா கோரியது. தலிபான்கள் ஏற்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு தான் அமெரிக்கா அவ்வாறு கோரியது.

தங்களது ஆட்சியதிகாரத்தைப் பாதுகாக்க நினைத்திருந்தால் சத்தமின்றி ஒசாமாவை அமெரிக்காவிடம் ஒப்படைத்திருக்கலாம். வேறெந்த நாட்டினது அரசியல்வாதிகளாக இருந்தாலும், அதனைத்தான் செய்திருப்பார்கள்.

ஆனால், அவ்வாறு அரசியல்வாதிகள் போன்று செயற்படுவதற்கு போராளிகளான தலிபான்கள் உடன்படவில்லை. இது தாலிபான்களின் நேர்மையையும், அவர்களின் கொள்கையிலுள்ள உறுதிப்பாட்டினையும் காண்பிக்கின்றது.

அமெரிக்காவின் வர்த்தகக் கட்டடத்தின் மீது அல்-கொய்தா இயக்கம் தான் தாக்குதல் நடாத்தியது என்பதற்கான ஆதாரத்தினை வழங்குமாறும், அவ்வாறு ஒசாமா தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், நிச்சயம் அவர் தண்டிக்கப்படுவார் என்றும் தலிபான்கள் கூறினர்.

ஆனால், தலிபான்களின் இந்த பதிலை உதாசீனம் செய்து விட்டு ஓசாமாவை ஒப்படைப்பதற்கு தலிபான்கள் மறுக்கின்றார்கள் என்ற செய்தியினை மாத்திரம் ஊடகங்கள் மூலமாக அமெரிக்கா உலக மக்களை நம்பச்செய்தது.

அமெரிக்காவின் யுத்தத்துக்கான ஆயத்தங்களை அவதானித்த போது, வர்த்தகக்கட்டடம் தாக்கப்படுவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகியிருந்தது போன்றதொரு தோற்றப்பாடு காணப்பட்டது.

தொடரும்....