Main Menu

தேசியம்

சீசன் வியாபாரம் போல களைகட்டும் பிரசாரங்கள்

(ஏ.எல்.நிப்றாஸ் - வீரகேசரி 13.10.2019) திருவிழாக்காலம் அல்லது பெருநாள் காலம் வந்து விட்டால், வெளியூரிலிருந்து அங்காடி வியாபாரிகளும் நடைபாதையோர வர்த்தகர்களும் வந்து பண்டிகைத்திடலில் கடை விரிப்பார்கள். கடந்த முறை கொண்டு வந்திருந்த பொதிகளில், முன்னர் விற்கப்படாத பொருட்களையும் சில புதிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு தொழிலுக்கு வந்திருப்பார்கள்.

கற்பனைக்கு அப்பாற்பட்ட உத்தரவாதங்களை எல்லாம் வழங்கி, வாடிக்கையாளர்களை பசப்பு வார்த்தைகளால் கவர்ந்து,  தம்மிடமிருக்கின்ற பண்டங்களை விற்பனை செய்வதிலேயே அவர்கள் குறியாக இருப்பார்கள். பெருநாள் அல்லது பண்டிகை பருவகாலம் (சீசன்) முடிவடைகின்ற கடைசி நாள் இரவு, தங்களது பொட்டலங்களையும் மூட்டை முடிச்சுக்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போய் விடுவார்கள்.

பிறகு வேறு எங்காவதொரு பிரதேசத்தில் சென்று கடை விரிப்பார்கள். இரு பண்டிகைக் காலத்திற்கிடைப்பட்ட காலத்தில் அவர்களை இந்தப்பக்கம் காணவோ சந்திக்கவோ முடியாது. எங்காவது போகின்ற வழியில் அவர்களை நாம் அடையாளங்கண்டு, பேச்சுக்கொடுத்தால் கூட நழுவிச்சென்று விடுவார்கள். அதன் பின், அடுத்த பெருநாள் காலத்திலேயே முன்னர் வந்த பிரதேசத்திற்கு தொழிலுக்காக வருவார்கள்.

நேரிடையாகச் சொன்னால், இந்நாட்டின் ஆட்சியாளர்கள் சிலர் மட்டுமன்றி, அரசியல்வாதிகளும் சீசனுக்கு வரும் நடைபாதையோர வியாபாரிகள் போலவே மக்களிடம் தேர்தல் வியாபாரத்திற்காக வருகின்றார்கள். சிங்களத்தில் ‘சந்த வியாபாரய’ என்பது பொருத்தமாகவே தெரிகின்றது. குறிப்பாக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தளபதிகள், அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், எம்.பி.க்களை இவ்வகையில் சேர்க்கலாம். அதற்கான அனைத்துத்தகுதிகளும் அவர்களுக்கிருக்கின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் சரக்குப் பொதிகளுக்குப் பதிலாக பொய், கற்பிதங்கள், போலி வாக்குறுதிகளை மூட்டை கட்டிக் கொண்டு வருகின்றார்கள். ஒரு தேர்தலுக்கு வந்து மேடை போட்டு அதாவது கடை விரித்து, தங்களிடமிருக்கின்ற சரக்குகளை மக்களுக்கு விற்று விட்டுப்போனால் அவர்களை அடுத்த தேர்தல் வரைக்கும் பெரிதாக இப்பக்கம் காணக் கிடைப்பதில்லை. உழைத்த ‘இலாபத்தை’ சுகித்துக் கொண்டிருப்பார்கள். கேட்டால்… ‘பிஸி’ என்பார்கள்.

அடுத்த பண்டிகைக்காலம் அதாவது சீசன் வந்தால் மீண்டும் தமது படை பட்டாளங்கள், எடுபிடிகளுடன் மக்கள் மன்றத்திற்கு வந்து கடை விரிக்கின்றார்கள். ‘கடந்த முறை விற்ற பொருட்களில் ஏற்பட்ட குறைபாடுகள் இம்முறை ஏற்படாது’ என்றும் ‘இப்பொருட்கள் ஒரிஜினல், உங்களது பாவனைக்கு அனுகூலமானது’ என்றும் சொல்ல முற்படுவதைத்தான், முஸ்லிம் சமூகம் ஆண்டாண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இன்னுமொரு திருவிழா ‘ஒரு சமூகம் ஏமாற்றப்படுவதை விட தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உணராமலிருப்பது தான் பெரும் தண்டனையாம்’. அப்படிப்பார்த்தால், முஸ்லிம் சமூகம் தமது அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படுகின்றோமென்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதற்கான பரிகாரங்களைத்தேட முற்படவுமில்லை. மீண்டும் அதே சீசன் வியாபாரிகள்,  அதே அரசியல்வாதிகள், அதே பொருட்கள், அதே போலி வாக்குறுதிகள் என ஏமாற்றப்படுகின்றதென்பதில் யாருக்காவது சந்தேகமிருக்கின்றதா?

இப்போது ஜனாதிபதித்தேர்தல் பண்டிகைக்காலம் ஆரம்பித்திருக்கின்றது. முஸ்லிம் கட்சித்தலைவர்களும், ஏனைய அரசியல்வாதிகளும் மக்களிடம் வந்து தாம் ஆதரவளிக்கும் பிரதான வேட்பாளருக்காக வாக்குக் கேட்கத் தொடங்கியிருக்கின்றார்கள். தேர்தல் பிரசாரத்திற்கு சரியாக இன்னும் ஒரு மாதமே இருக்கின்றமையால், ஹெலிகொப்டர்களில் பறந்து வந்து மக்களைச்சந்திக்க வருவார்கள். மரண வீடுகளிலும் திருமண நிகழ்வுகளிலும் முன்வரிசையில் அவர்களைக் காணலாம்.

கடந்த ஜனாதிபதித்தேர்தல் முதல் உள்ளூராட்சித்தேர்தல் வரையும், பின்னர் உள்ளூராட்சித்தேர்தல் முடிவடைந்ததிலிருந்து இன்று வரையும் மக்களை விட்டும் தூரமாகி, சாதரண மக்களால் சந்திக்க முடியாத நிலையில், ஒரு ‘மாடி வீட்டு மைனர்’ போல மாறியிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு மாதத்திற்கு ‘எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர்.’ போல நெருங்கி வரக்காணலாம். இதில் எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் விதிவிலக்கல்லர்.

“உலகெங்கும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரித்தான் இருக்கின்றார்கள். அவர்கள் ஆறுகளில்லாத இடங்களில் கூட பாலங்கள் போடுவோமென்று மக்களுக்கு போலி வாக்குறுதியளிக்கின்றார்கள்” என்று சோவியத் ரஷ்யாவின் முன்னாள் பிரதமரும் கம்யுனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான நிகிடா சேர்கோவிச் கூறினார். பொதுவாக, இலங்கை ஆட்சியாளர்களுக்கும் குறிப்பாக, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இது சாலப்பொருந்தும்.

காற்றில் போன வாக்குறுதிகள் 2015 தேர்தல்களில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் வெற்றி வாகை சூடினர். இருபதுக்கு மேற்பட்ட தேர்தலில் தொடர் தோல்வியுற்றுக் கொண்டிருந்த ரணில் மற்றும் ஒரு சுகாதார அமைச்சராக கண்டு கொள்ளப்படாதிருந்த மைத்திரி ஆகியோரின் வெற்றியை உறுதிப்படுத்தியதில் 10 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகளில் பெரும் பங்கிருக்கின்றது.

தேர்தல் காலத்தில் இவ்விருவரும் அதே போல் சந்திரிக்கா அம்மையார் போன்றவர்களும் முஸ்லிம் சமூகத்திற்கு எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கினார்கள். அளுத்கம கலவரத்திற்கான சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றனர். இனவாதிகளை நாய்க்கூண்டில் அடைப்போம் என்றும் எமது ஆட்சியில் இனவாதத்திற்கு இடமிருக்காது. முஸ்லிம்கள் தமது உரிமைகளுடன் நிம்மதியாக வாழலாம் என்றும் கூறினர்.

முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகாலப்பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்த்து வைக்கப்படும். தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். ஊழல் செய்தவர்கள் மற்றும் வசீம் தாஜூதீன், லசந்த விக்கிரமதுங்க போன்ற பலரைக் கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றெல்லாம் ஏகப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இவற்றுள், பொதுவாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 60 சதவீதத்திற்கு அதிகமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதற்கு நாட்டுத்தலைவரின் பெயரில் இயங்கும் இணையமே சான்று பகர்கின்றது.

இதே நேரம், முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் வழங்கிய வாக்குறுதிகளிலும் 2010 தேர்தல் காலத்தில் மஹிந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளிலும் உருப்படியான ஒன்றிரண்டு கூட நிறைவேற்றப்படவில்லையென்பதற்கு இருபது இலட்சம் முஸ்லிம்கள் சாட்சியாக இருக்கின்றனர்.

பெருந்தேசியம் ஏமாற்றிய சமகாலத்தில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தளபதிகளும் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இந்த சமூகம் வெளிப்படையாகவே ஏமாற்றப்பட்டிருக்கின்றது.

வெட்கப்பட வேண்டும் பெருந்தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லிம் சமூகத்திற்குமிடையில் மத்தியஸ்தம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அதை வைத்து தமது சொந்த அரசியலை நிலைநிறுத்திக் கொள்வதில் காட்டிய அக்கறையை விட, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் காட்டிய அக்கறை மிக மிகக்குறைவாகும். இதற்காக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமன்றி, முஸ்லிம் சமூகமும் வெட்கப்பட வேண்டும்.

பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், தேசியப் பட்டியலுக்காக சண்டை பிடித்து அதைப் பெற்றுக்கொண்டவர்கள் உள்ளடங்கலாக அனைத்து எம்.பிக்களும் மாகாண சபைகளில் அதிகாரத்திலிருந்தவர்களும் இது விடயத்தில் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் அல்லது அரசியல் தந்திரத்தினூடாக மக்களை மந்திரித்து ஏமாற்றியிருக்கின்றார்கள். யாருக்கு கோபம் வந்தாலும் இது தான் யதார்த்தம்.

இந்த ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படுமென்று முஸ்லிம் அரசியல்வாதிகள் (2000ஆம் ஆண்டிலிருந்து கூறி வருவதைப்போல) 2015 இலும் வாக்குறுதியளித்தார்கள். கிழக்கின் கரையோர நகரங்கள் சிலவற்றை துபாய், பஹ்ரைன் போல மாற்றுவோம் என்றனர். கடல் நீரை சுத்திகரிப்போம் என்றனர். நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை ஒரு மாதத்திற்குள் பகிர்ந்தளிப்போம் என்றனர். அது போதாதற்கு முஸ்லிம் கூட்டமைப்பென்ற ஒன்றை நிறுவி 13 பிரகடனங்களையும் செய்தனர்.

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விவகாரம், வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் வாழ்வியல் பிரச்சினைகளெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் தீர்க்கப்படுமென்று முழங்கினர். இனவாதம் இனி இருக்காது, மைத்திரியும் ரணிலும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுவர் என்று பரிந்துரை செய்து, மக்களிடம் வாக்குக் கேட்டார்கள். ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இவற்றுள் கிட்டத்தட்ட 99 சதவீதமான வாக்குறுதிகள் முஸ்லிம் தலைவர்களுக்கே மறந்து விட்டன. முஸ்லிம் அரசியல்வாதிகளின் வலதுகைகள், தீவிர ஆதரவாளர்கள், இணைப்பாளர்கள், அமைப்பாளர்களிடம் “உங்கள் தலைவர்,  அமைச்சர் வழங்கிய வாக்குறுதிகள் என்ன? அதில் எவற்றை நிறைவேற்றி இருக்கின்றார்” என்று கேட்டால், படுக்கையில் சிறுநீர்கழித்த பிள்ளையைப் போல அசடு வழிவார்கள்.

ஏனெனில், முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்சினை என்ன? நீண்டகால அபிலாஷைகள் எவை? எவற்றுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும்? என்ற சரியான புரிதல் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு கிடையாது. இவற்றுள் முக்கிய பிரச்சினைகளை ஆட்சியாளர்களிடம் கோரிக்கையாக முன்வைத்து, அதற்காகத் தொடர்ந்து போராடிய வரலாறு முஸ்லிம் அரசியலுக்கில்லை. அத்துடன், தாம் வழங்கிய வாக்குறுதிகள் என்னவென்பது அவர்களுக்கே மறந்து விடும் ஒரு விசித்திர நோய் முஸ்லிம் அரசியலைப் பீடித்திருக்கின்றது.

ஒரு தமிழ திரைப்படத்தில் ஹோட்டல் நடாத்தும் நடிகர் செந்திலைப்பார்த்து ஒருவர் புகழ்வார். செந்திலும் “அண்ணனுக்கு ஒரு போண்டா பார்சல்”, “போண்டாவுடன் வடை ஒன்று கொடு” என்று சொல்லிக் கொண்டிருப்பார். கடைசியில் அவருக்கு எதுவும் கிடைக்காது. “நீ எனது சந்தோசத்திற்காகப் புகழ்ந்தாய் அது போல நானும் உனது மன மகிழ்ச்சிக்காக உணவு தருவதாகச் சொன்னேன்” என்பார் செந்தில். வாசகர்களுக்கு கதை புரிந்திருக்குமென நினைக்கின்றேன். இது தான் முஸ்லிம் அரசியலில் நடந்து கொண்டிருக்;கின்றது.

தூரமாகிய மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகத் தொடராக போராடாமை என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, தேர்தல் இல்லாத காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் வாக்களித்த மக்களுக்குமிடையிலான உறவென்பது துருவப்பட்டுப் போவதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

உண்மையில், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் தம்மளவில் உள்ளார்ந்தமாக பலவீனமடைந்து செல்கின்றது. கட்சிக் கட்டமைப்புக்கள் முறையாக இல்லையென்பதுடன், பதவிச்சிக்கல்களும் உட்கட்சி சண்டைகளும் பெரும் சாபமாக இருந்து கொண்டிருக்கின்றன. இந்தப்பின்னணியில், எந்த முஸ்லிம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் சந்திப்புக்களை கிரமமான அடிப்படையில் நடாத்துவதில்லை. முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோருவதற்கோ அல்லது தமது பிரச்சினைகளை தமது தலைவரிடம் முன்வைக்கவோ கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் கிடையாது.

ஒரு அவசரத்திற்கு தலைவர்களை மக்களால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது. அநேக முஸ்லிம் அரசியல்வாதிகள் தொலைபேசிக்கு பதிலளிப்பதில்லை. சிலரது தொலைபேசிகள் ‘ஓ.ஃப்’ செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். இதனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மக்கள் தொடர்பென்பது பூச்சியத்திற்கு அண்மித்ததாகவே காணப்படுகின்றது. இது மக்கள் சார்பு அரசியலில் பெரும் குறைபாடென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் சார்பு அரசியலைச் செய்தால் தேர்தல் காலத்தில் இந்தப்பாடுபட வேண்டியதில்லை. மக்களிடம் ஒரு தடவை சொன்னால் போதும். தமது பிரதிநிதி சொல்கின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றிரண்டையேனும் நிறைவேற்றாமையால், வெட்கமில்லாமல் மேடைகளில் வந்து எந்தப் பொய்யைக்கூறி எப்படி வாக்குக்கேட்கலாம் என்ற பிரச்சினை தற்போது சஜித்தை, கோட்டாவை ஆதரிக்கின்ற எல்லா முஸ்லிம் அரசியவாதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

திராணியற்ற சமூகம் மெக்சிகோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயர் ஒருவரை இரு தினங்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒரு வாகனத்தில் கட்டியிழுத்துச் சென்றுள்ளனர். ஆனால், எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கிய முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளை வழிமறித்து, ‘ஏன் இதனை நீங்கள் நிறைவேற்றவில்லை?’ என்று சட்டைப்பையைப் பிடித்துக் கேட்கும் ஒரு கூட்டம் இன்னும் முஸ்லிம் சமூகத்திற்குள் உருவாகவில்லை.

முஸ்லிம் சமூகத்திற்கு அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனங்களை ஏன் நிறைவேற்றவில்லையென்று கேள்வி கேட்டு அவற்றை நிறைவேற்றிப்பெற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முழுமூச்சுடன் செயற்படவுமில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என்று உரிமையோடு கேட்க முஸ்லிம் பொதுமக்களுக்கும் திராணியில்லை. முஸ்லிம் சமூகம் இன்னும் ஏமாறத்தயாராக இருக்கின்றதென்பதே இதன் உள்ளார்த்தமாகும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் அதிகமாகும். அத்துடன், நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ள முஸ்லிம் சமூகம் தேர்தல் கால நிலவரங்களை உற்று நோக்கி மிகக்கவனமாக முடிவெடுக்க வேண்டும். சில அரசியல்வாதிகளை விட சிறந்த அரசியல் அறிவும், சமூக அக்கறையும் கொண்ட நபர்கள் முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்றனர். நமக்கு பெருந்தேசிய ஆட்சியாளர்களையும் தெரியும். நமது முஸ்லிம் அரசியல் மேய்ப்பர்களையும் நமக்கு நன்றாகவே தெரியும்.

எனவே, முஸ்லிம் அரசியல் தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பி பின்னால் முஸ்லிம் சமூகம் போகத்தேவையில்லை. ‘தலைவர் சொன்னால் சரியாக இருக்கும்’, ‘எங்களது எம்.பி.யின் வியூகம் பிழைக்காது’ என்றும் மடமைத்தனமாக எண்ணத் தேவையில்லை. அரசியல்வாதிகளின் எடுபிடிகள், அவர்களால் மந்திரித்து விடப்பட்டுள்ள தீவிர பக்தர்கள் வேண்டுமென்றால், அப்படிச் செயற்படட்டும். ஆனால், சமூக அக்கறையுள்ள, தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கின்ற முஸ்லிம் மக்கள் இப்பேர்ப்பட்ட மாயத் தோற்றங்களில் மயங்கி விட வேண்டாம்.

பெருந்தேசியக்கட்சியின் வேட்பாளர்கள் இப்போது முஸ்லிம்களின் காலடிக்கு வருவார்கள். அவர்களுக்கு பரப்புரை செய்வதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு மேடை ஏறுவார்கள். திருவிழா வியாபாரிகளின் பொருள் உத்தரவாதம் போல, தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கும். யாரையும் எடுத்த எடுப்பில் நம்பி, யாருக்கு வாக்களிப்பதென்று அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது.

முஸ்லிம் சமூகம் அவசரப்படத் தேவையில்லை! இன்னும் ஒரு மாதம் காலமிருக்கின்றது. எனவே, பகுத்தறிவைப் பயன்படுத்தி, நன்றாகச் சிந்தியுங்கள். வியாபாரிகள் கொண்டு வரும் போலிகளை நம்பி இன்னுமொரு முறை ஏமாந்து விடாமல், புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள். இதை விட சொல்வதற்கு வேறான்றுமில்லை! - ஏ.எல்.நிப்றாஸ்