Main Menu

Digital Libraray

தேன்கூடு – வியந்து பார்க்கும் இறைவனின் அற்புதம்

MU.முஹம்மது பாரீஸ் (Bsc) தேன்கூடு (A Miracle in Engineering & Technology) இந்த “தேன்கூடு” (Bee hive) என்பது. மிகச்சிறிய முட்டையிலிருந்து வெளியேறிய ஓர் (லார்வா-larva) அற்பப்புழு, (ப்யுபா-pupa) கூட்டுப்புழுவாகி பிறகு இறக்கை முளைத்துப் பறந்து வரும் மிக சாதாரணமான “தேனீ எனும் ஒரு பறக்கும் பூச்சி” இனத்தினால் கட்டப்படுவது தான் என்று அறிந்த போது… அதுவும் எவ்வித உலகக்கட்டுமானப் பொருட்களுமின்றி சுயமாக தன்னிடம் சுரக்கும் மெழுகால் கட்டுகிறது என்று அறிந்த போது… “இறைவனுடைய படைப்பே படைப்பு..! .இறைவனைத்தவிர எவனாலும் இதைப்படைக்க முடியுமா? என எண்ணம் தோன்றியது!

அப்படி என்ன தான் இருக்கிறது அந்த தேன்கூட்டில்..? வாருங்கள் பயணிப்போம்.

முதலில் தேன் கூடு பற்றி இறை வேதம் என்ன சொல்கிறது? எனப்பார்த்து விட்டு அறிவியலை நோக்குவோம்.

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் : 16:68)

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ “பின், நீ எல்லா விதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சையுண்டு. நிச்சயமாக, இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:69)

சரி இவ்வசனங்களை மனதில் நிறுத்தி அறிவியலின் பக்கம் பயணிப்போம். தேனீக்கள் தங்களுக்கென்று உறைவிடம் மற்றும் உணவுக்களஞ்சியம் வேண்டி, முட்டையிட்டு, கூட்டுப்புழு காத்து, குஞ்சு பொரிக்க வேண்டி தன் தேவைக்காகக் கட்டுகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஆயிரக்கணக்கில் ஒன்று கூடிக்கட்டுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு மூலையிலிருந்து கட்ட ஆரம்பிக்கின்றன. இருபுறமும் கட்டுகின்றன. அதில் அளவீடுகளில் அப்படி ஒரு கணித பிழையற்றது..! அற்புதமான பொறியியல்..! வியப்பில் ஆழ்த்தும் தொழில் நுட்பத்திறன்..!

பல்லாயிரக்கணக்கில் மக்கட்தொகை இருந்தாலும் எவ்வித குழப்பமுமின்றி அவரவர் வேலையை அவரவர் உணர்ந்து தமக்குள் பகிர்ந்து கொண்டு ஒரே குறிக்கோளாய் தூக்கம், ஒய்வில்லாத உழைப்பு..! அச்சமுதாயத்தில் அப்படியொரு சட்டம், ஒழுங்கு, கட்டுக்கோப்பு.

தேன்கூடு எதனால் உருவானது? இவ்வுலகில் கிடைக்கும் எதைக்கொண்டும் தன் கூட்டை உருவாக்குவதில்லை தேனி. இந்தக்கூட்டைக்கட்ட பயன்படும் இதற்கான மூலப்பொருள் Beeswax எனும் மெழுகுப்பொருள். இது தேனீக்களின் வயிற்றில் செதில்கள் (scales) போன்று நான்கு ஜோடி சுரப்பிகளிலிருந்து சுரக்கிறது.

எப்போதுமல்ல, தேன்கூட்டைக் கட்டும் போது மட்டுமே. இதனை தன்னுடைய ஆறு கால்கள் மூலம் வழித்து, ஒன்று திரட்டி, வாய்க்கு கொண்டு வந்து அதனை நன்றாக வாயினாலேயே அடித்து, வளைத்து, மென்று, திரட்டி சரியாக (90 F) 35′ செல்சியஸ் வந்ததும் (இந்த வெப்ப அளவு தான் ரொம்ப முக்கியமாம்) அதைக்கொண்டு, மிக துல்லியமான அளவுகள் கொண்ட ஒரே சீரான அறுகோண வடிவ அறைகளை (perfect equal sized hexagonal comb-cells) கொண்டு, ஒரு பக்கத்தின் அறுகோண அறை அடுத்த பக்கத்தின் மூன்று அறுகோண அறைகளுக்கு மத்தியில் வரும்படி இருபுறமும் பிரமிக்க வைக்கும் ஒரு கலை நேர்த்தியில் ஒன்றன் மீதொன்றாக அடுக்கி படு விரைவாகக் கூட்டைக் கட்டுகிறது.

தேன்கூட்டின் இந்த அறுகோண அறைகளுக்கு (hexagonal honey comb-cells of the beehive) பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு உபயோகங்கள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது. ஆனால், அவையனைத்தயும் பொருட்படுத்திக் கட்டுகிறது.

இங்கே கூடு கட்டும் போது மெழுகுப்பொருளை வீணாக்காமல் படு சிக்கனமாக உபயோகிக்கிறது. உதாரணமாக, 40 கிராம் மெழுகுப்பொருளில் 22.5cm X 37cm அளவுள்ள ஒரு கூட்டைக்கட்டி விடுகிறது. இந்த மிகச்சிறிய கூடு இரண்டு கிலோவுக்கும் மேல் எடை தாங்கும் சக்தி கொண்டது. மரம், மலை, கட்டடம் என்று பல இடங்களிலிருந்து மேற்புறமாக கட்டத்துவங்கும் தேனீ, கூட்டை கீழ்நோக்கி முன்புறம் பின்புறமாக இரண்டு வரிசைகளில் கட்டுகிறது. அப்போது அது சற்று இருபுறமும் விரிவடைந்து சென்று அடியில் பிரமிக்க வைக்கும் வகையில் எங்கு ஒன்று சேர்ந்தது என்று சொல்ல முடியாதபடி இணைப்பிலுள்ள அனைத்து அறுகோணங்களும் ஒரே அளவினதாக கணக்கச்சிதமாக ஒன்று சேருகிறது.

அதே நேரம், அக்கூட்டில் இரண்டு வித உயரங்களில் அறைகள் இருக்கும். ஒன்று தேன், மகரந்தம் ஆகியன சேமிக்க மற்றும் பெண் லார்வா வளர, பெண் ப்யுபா உருமாற என்று பெண் தேனிக்களுக்காக நிறைய 5.2 to 5.4 மி.மீ அளவு அகலம் கொண்ட அறைகள். மற்றது ஆண் தேனீக்கள் வளர 6.2 to 6.4 மி.மீ அகல அளவிலுள்ள அறைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். இதெல்லாம் பகுத்தறிவற்ற இந்த பூச்சி இனத்தில் எப்படி யார் முடிவு எடுக்கிறார்கள்? என்பது விஞ்ஞானிகளுக்கு அறிவியலுக்குப் புரியாத புதிர். ஆனால், குர்ஆனில் அல்லாஹ் விடையளித்திருக்கிறான்.

ஒரு சராசரி கூட்டில் எத்தனை அறுகோண அறைகள் இருக்கும்? சுமார் 35,000 hexagonal comb-cells. இந்த அறைகளின் தடிமன் என்ன தெரியுமா? சகோதரர்களே? வெறும் 0.07 மி.மீ. இவ்வளவு மெல்லிய சுவர் கொண்ட இது போன்ற அறைகளில் தான் எவ்வளவு தேன் இருக்கும்..? சுமார் 9.9 கி.கி. எடை கொண்ட தேன்..!

தன் வாழ்நாளில் உறக்கம் எல்லாம் கிடையாது தேனிக்கு. கடும் கும்மிருட்டில் கூட கூடுகட்டும் தேனீ..!

ஒவ்வோர் அறையின் அறுகோணமும் அளந்து பார்த்தால் மிகத்துல்லியமாக 120 கோண பாகையில் இருக்கிறது..!

இத்தேன்கூட்டின் அடிவரிசையில் இருபக்கமும் உள்ள அறைகள் ஒன்றாக இணைந்திருக்கும் இடத்தில், மூன்று அறைகள் ஒரு அறையுடன் பின்னிப்பிணைந்து மிக உறுதியான கட்டமைப்பை கொடுக்கிறது. இவை நேருக்கு நேராக 180 கோணத்தில் கிடைமட்டமாக இணைந்தால், 90 கோண பாகையில் மொத்த அறைகளும் கணம் தாங்காமல் புவி ஈர்ப்பு சக்தியால் ஒன்றன் மீது ஒன்றாக சரிந்து விடக்கூடும் அல்லவா..? அதனால் சற்று ‘v’ போல மேல்நோக்கி குறுகி இருப்பது கூட்டுக்கு சிறந்த பாதுகாப்பு.

ஆக, இக்கூட்டின் கொள்ளளவு, நீளம் அகலம், அறைகளின் எண்ணிக்கை, கூட்டின் மொத்த எடை, ஈர்ப்பு விசை என்று சகலத்தையும் கணக்கில் கொண்டு பிற்காலத்தில், கணித அறிவியல் வளர்ந்த நிலையில், வல்லுனர்கள் இது போன்ற கூட்டு அமைப்புக்கு 109 கோண பாகையில் இவை இரண்டும் சேர்ந்திருந்தால்தான் சரியான உறுதி இருக்கும் என்று கணக்கிடப்பட்டது.

பின்னர், தேன்கூட்டின் இந்த அடிவரிசை back to back அறைகளின் இணைப்பில் “ஏற்றகோணம்” என்ன என்று அளந்தால்…! என்ன கோணம் தெரியுமா சகோதரர்களே? மிகச்சரியாக அதே 109 கோணப்பாகை தான்!

இதெல்லாம் விட, கணித வல்லுனர்களுக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அதெப்படி இந்த தேனீக்கள் அறுகோண அறைகளாக கட்டின? ஏன்.. தேனீ லார்வா எல்லாமும் வட்ட வடிவிலிருக்க வட்ட வடிவில் அறைகளை கட்டவில்லை? வட்டங்களுக்கிடையேயுள்ள இடம் வீணாகுமென்றால், சதுர வடிவில் கட்ட வேண்டியது தானே. அறுகோண ஐடியா எப்படி? யார் சொல்லிக்கொடுத்தது?

ஏனென்றால், பகுத்தறிவு கொண்ட மனிதனின் பிற்கால கணித அறிவு வளர்ந்து படு நுணுக்கமான நவீன கணிதவியல் ஆராய்ச்சிக் கோட்பாடுகள் கூறுகின்றன. “the hexagonal cells have an obvious advantage in terms of utilization of area per unit volume” என்று. அதாவது அறுகோண வடிவ அறை இணைப்புகள் தான் குறைந்த கட்டுமானப்பொருளில் அதிக கொள்ளளவு பெற முடியுமென்றும் இது தான் மிகச்சரியானதென்றும் நவீன கணிதம் கூறுகிறது. மனிதனுக்கு சில நூற்றாண்டிற்கு முன்னர் தெரிந்த இப்பேர்ப்பட்ட அறிவுத்திறன் இந்த தேனிக்கு எப்போது வந்தது? மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே இப்படித்தானே இவை கட்டுகின்றன. அவற்றுள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று, ஆப்ரிக்காவில் கட்டினாலும், அமெரிக்காவில் கட்டினாலும், ஆஸ்திரேலியாவில் கட்டினாலும் அக்கூட்டில் இதே கட்டமைப்புத்தானே. எப்படி சாத்தியம் இதெல்லாம்?

இரண்டு பக்கத்திலிருந்து கட்டப்படும் இதே பேன்ற எந்த மனித கட்டுமானமும் மிகச்சரியாக தேன் கூட்டை போல் ஒன்று சேரவே முடியாது. இது இவ்வுலகில் மனிதர் யாராலும் முடியவே முடியாது. ஆனால், தேனீயால் முடிந்திருக்கிறதுதே.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் முடிகிறதே. உலகின் எந்த கண்டத்தில் வாழும் தேனீக்களும் ஒரே மாதிரி ஒரே டிசைனில் தானே கூட்டைக்கட்டுகின்றன. அவர்களுக்குள்ளே எந்தவொரு தகவல் தொழில்நுட்பமும், வீடியோ சாட்டிங்கும் கிடையாதே. ஆனாலும், இந்த அதிசயம் நடந்து கொண்டே தானே உள்ளது. இந்த உயிரினத்திற்கு மட்டும் இந்த (Engineering & Technology) திறன் எப்படி வந்தது? எந்த உயிரியிடமிருந்து பரிணாமம் பெற்று வந்தது? இந்த அற்ப இனத்தை விடவெல்லாம் பல மடங்கு சிறந்த மூளை பெற்ற மனிதனான நமக்கு ஒரு பேப்பரில் கூட இதே போன்று இரண்டு பக்கமும் வரைய முடியவில்லையே. இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் தான், தேனீயை “social insect” என்று வகைப்படுத்தி, இது தன் எந்த பரிணாம தத்துவத்துக்கும் ஒத்துவராதவை எனப்புரிந்து கொண்டு தான் The Origin of Species -ல் சார்லஸ் டார்வின் இப்படிக்கூறுகிறார் :- Can instincts be acquired and modified through natural selection? What shall we say to the instinct which leads the bee to make cells, and which has practically anticipated the discoveries of profound mathematicians?

ஆனால், இறைவன் கூறும் பதில்

وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்). (அல்குர்ஆன் : 16:68)

ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا‌ يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சையுண்டு. நிச்சயமாக, இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:69).

உதவிய சகோதரர்களுக்கு நன்றி

உசாத்துணை: அல் குர்ஆன் ரா. பிரபு - கட்டுரை தேனீ - நூல் விகிபீடியா சில வீடியோக்கள் தாளிகை இணையம் Saes இணையம்